டெல்லியில் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களால் தொடங்கப்பட்டு பெரும் கவனத்தைப் பெற்ற ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பில் தற்போது அதிகாரப்பூர்வமாகப் பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான மனிஷ் பிரம்பட், ‘காக்ரோச் ஜனதா கட்சி-டெமாக்ரடிக்’ (CJP-Democratic) என்ற புதிய அமைப்பைத் டெல்லியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மனிஷ் பிரம்பட், மக்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான மூல ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பு, தற்போது தனது உண்மையான பாதையிலிருந்து விலகி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு (AAP) ஆதரவாக மட்டுமே செயல்படும் ஒரு கைப்பாவைக் குழுவாக மாறிவிட்டது என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார். மாணவர்களின் உரிமைகளுக்காகவோ அல்லது பிற மாநில மக்களுக்காகவோ போராடாமல், பாஜகவை எதிர்ப்பதை மட்டுமே நோக்கமாகவும், அதற்கு ஆம் ஆத்மிக்குச் சாதகமாக அரசியல் பேரங்களை நடத்துவதையும் CJP தலைவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட தகுதியான மாணவர்களுக்கு நீதி கோரித் தொடங்கிய இந்த இயக்கம், தற்போது மாணவர்களையும், தியாகம் செய்த பெண்களையும், சீக்கிய மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டதாக அவர் கூறினார். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பங்கெடுத்த ஒரு மக்கள் இயக்கத்தை ஒரு சில நபர்கள் மட்டும் தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதனால் உண்மையான ஜனநாயக வழியில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்துச் செயல்படவே இந்த ‘CJP-டெமாக்ரடிக்’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.





