செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனிதகுலத்தின் எதிர்காலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்களும், சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இருப்பினும், இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலும் நிராகரித்துள்ளார். AI ஆபத்துகள் குறித்துப் பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் வெறும் “புரளி” என்றும், அதற்குப் பின்னால் “சதித்திட்டம்” ஒளிந்துள்ளதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தற்போது ஓபன்ஏஐ (OpenAI), அன்த்ரோபிக் (Anthropic) போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளே AI வளர்ச்சியைக் சற்றே நிதானப்படுத்த வேண்டும் எனவும், அரசாங்கத்தின் மேற்பார்வை அவசியம் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இத்தகையக் கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் தொழில்நுட்பப் போட்டியை முடக்கிவிடும் என்றும், இதனால் சீனா மட்டுமே பயனடையும் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். AI போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே உலகை ஆளுவார்கள் என்பதால் அமெரிக்கா தனது முன்னிலையை இழக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
The only control or “guardrails” that AI needs is a STRONG AND SMART (High IQ!) PRESIDENT, and the U.S.A. has that, in spades! The Trump Administration has stopped AI “people” from doing bad, or potentially bad, “things,“ like Dario (Anthropic!), who is now pretending to be a… pic.twitter.com/DZPJW5YkzZ
— Commentary Donald J. Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) September 14, 2026
இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், AI தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த சட்டங்களோ அல்லது தனி அமைப்புகளோ தேவையில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். “செயற்கை நுண்ணறிவுக்குத் தேவைப்படும் ஒரே பாதுகாப்பு அல்லது கட்டுப்பாடு ஒரு பலமான மற்றும் புத்திசாலியான அதிபர் மட்டுமே” என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபர் டிரம்பின் இந்த அதிரடி நிலைப்பாடு உலகளாவிய தொழில்நுட்பத் துறையிலும், அமெரிக்க அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





