தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி உரிய காலத்தில் மேட்டூரை வந்தடைகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் ‘போட்டோ ஷூட்’ வண்டிகள் பிலிகுண்டுலு எல்லைக்கு கரெக்டாக வந்து சேர்ந்துவிடுகின்றன! கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என ஒருபுறம் பிடிவாதம் பிடிக்க, தமிழக அரசோ டெல்லிக்கும் பெங்களூருக்கும் மனுக்களை அனுப்பி காத்துக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கமான அரசியல் நாடகங்களுக்கு இடையே, தேமுதிக பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த் கையில் எடுத்த புதிய “டெக்னிக்” தான் இப்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்.
தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு எல்லைக்கு நேரில் சென்ற பிரேமலதா விஜயகாந்த், தமிழக-கர்நாடக நீர் அளவீட்டு நிலவரங்களை நேரில் பார்வையிட்டார். சரி, வழக்கமான அரசியல்வாதிகளைப் போல அறிக்கையோடு முடித்துக் கொள்வார் எனப் பார்த்தால், அங்கேதான் ஒரு மாஸ் “சினிமாட்டிக்” திருப்பத்தை வைத்தார்!
உடனே தனது தொண்டர்களிடம், “ஆற்றில் இறங்கி ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடிச்சுட்டு வாப்போ!” எனக் கட்டளையிட, ஓடோடிச் சென்ற தொண்டர்களும் காவிரியின் தெளிந்த நீரைப் பாட்டிலில் அடைத்துக்கொண்டு வந்தனர். அடுத்த நொடியே, அந்த பாட்டில் நீரை ஏதோ தீர்த்தம் போல கையில் எடுத்து, காவிரி தாயை நோக்கி மனமுருகி வேண்டி, “எல்லாருக்கும் காவிரித் தாய் அருள் கிடைக்கட்டும்!” என அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது தெளிக்கத் தொடங்கினார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “அப்பாடா! கர்நாடகாவில் இருந்து வர வேண்டிய பல டி.எம்.சி தண்ணீரை, ஒரே பாட்டில் தண்ணீரில் தெளிச்சுப் பிரச்சனையையே முடிச்சுட்டாங்கப்பா!” என மீம்ஸ்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.
ஒரு காலத்தில் கேப்டன் விஜயகாந்த் களத்தில் இறங்கி முழங்கிய பாணி வேறு; ஆனால், இன்று காவிரி நீரின் அளவை அளக்க வேண்டிய எல்லைக்கே சென்று பாட்டில் தண்ணீரை வைத்துப் பிரார்த்தனை செய்யும் இந்த “ஸ்மார்ட்” அரசியல், உண்மையிலேயே விவசாயிகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யுமா அல்லது அடுத்த தேர்தல் வரைக்குமான ஒரு கேமரா ஸ்டன்ட் மட்டுமேதானா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்!





