“எல்ஐசி, இபிஎஃப்ஓ பணத்தை அரசு பயன்படுத்தப்போகிறதா?” மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

எல்ஐசி மற்றும் இபிஎஃப்ஓ நிறுவனங்களில் உரிமை கோரப்படாமல் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை வேறு தேவைகளுக்காக அரசு பயன்படுத்தப் போவதாக வெளியான தகவல்களுக்கு மக்களவையில் மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி, எல்ஐசி மற்றும் இபிஎஃப்ஓ அமைப்புகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகையை தற்போதைய சட்டரீதியான நடைமுறைகளைத் தவிர்த்து வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஐஆர்டிஏஐ (IRDAI) விதிகளின்படி, எல்ஐசி நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கோரப்படாமல் இருக்கும் காப்பீட்டுத் தொகைகள் மூத்த குடிமக்கள் நல நிதியத்திற்கு (SCWF) மாற்றப்பட்டு வருவதாகவும், அந்த விதிகளில் மாற்றங்கள் செய்யும் உத்தேசம் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த மார்ச் 31 நிலவரப்படி எல்ஐசி நிறுவனத்தில் ரூ.7,318.50 கோடி உரிமை கோரப்படாத நிதியாக உள்ளது. இதில் ரூ.5,564.55 கோடி பாலிசிதாரர்களுக்குச் சேர வேண்டிய அசல் தொகையாகவும், ரூ.1,753.95 கோடி அதற்கான வட்டி வருவாயாகவும் நிலுவையில் இருக்கிறது. அதேபோல், இபிஎஃப்ஓ அமைப்பில் ‘உரிமை கோரப்படாத கணக்குகள்’ என்று எதுவும் இல்லை என்றும், சந்தா செலுத்தப்படாமல் உள்ள ‘செயலற்ற கணக்குகளில்’ (Inoperative Accounts) ரூ.9,330.56 கோடி நிலுவையில் உள்ளது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சற்றே குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

இந்த நிதியை உரிய பாலிசிதாரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எல்ஐசி தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெயர், பிறந்த தேதி மற்றும் பான் எண்ணை உள்ளிட்டு நிலுவைத் தொகையைத் தேடும் வசதியை வழங்கியுள்ளது. மேலும், இபிஎஃப்ஓ அமைப்பில் ரூ.1,000 அல்லது அதற்கு குறைவாக உள்ள செயலற்ற கணக்குகளுக்கு எந்தவித ஆவணச் சரிபார்ப்பும் இன்றி, ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்பும் முன்னோடித் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.