“நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுப்பு!” – பங்குச்சந்தை ஆலோசகர் பி.ஆர்.சுந்தருக்கு ஜாமீன்!

பிரபல பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.சுந்தர் பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் துறையினரால் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுத்த சென்னை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றி வரும் பெண் ஒருவர், கடந்த 2024-ஆம் ஆண்டு பி.ஆர்.சுந்தரை வேலை வாய்ப்பிற்காக அணுகியுள்ளார். அந்த அறிமுகத்தின் அடிப்படையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துப் பி.ஆர்.சுந்தர் தவறாக நடக்க முயன்றதாகவும், இதுகுறித்து அவருடைய மனைவியிடம் தெரிவித்தபோது அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை என்றும் அப்பெண் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், கடந்த ஜூன் மாதம் மன்னிப்பு கேட்பதாகக் கூறி அலுவலகத்திற்கு வரவழைத்து 3 மணி நேரம் அடைத்து வைத்து அச்சுறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுந்தரை பெங்களூரில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவியை சென்னை நீதிபதி முன் ஆஜர்படுத்திய போது, காவல் துறையின் விசாரணையில் போதிய முதற்கட்ட ஆதாரங்கள் மற்றும் காவலில் வைப்பதற்கான வலுவான காரணங்கள் இல்லை என்பதைக் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இருவரையும் சிறைக் காவலில் அடைக்கக் கோரிய காவல்துறையின் மனுவை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "இட்லி, சப்பாத்தி கிடையாது!" - சென்னை அம்மா உணவகங்களில் திடீர் மாற்றம்; என்ன நடக்கிறது? முழு விபரம்!

முன்னதாக, பி.ஆர்.சுந்தரின் இந்த திடீர் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது மற்றும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது எனப் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர். தற்போது நீதிமன்றம் அவரைச் சிறையில் அடைக்க மறுத்து ஜாமீனில் விடுவித்துள்ள சம்பவம் இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.