தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, தவெக (தமிழக வெற்றி கழகம்) ஆட்சி அமைப்பதற்குத் தனது கட்சி எந்தவிதமான முட்டுக்கட்டையையும் போடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அரசியலமைப்பு நெருக்கடியைத் தவிர்க்க முடிவு: தமிழகத்தில் தற்போதுள்ள எண்கணிதச் சூழலில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தால் அது அரசியலமைப்பு நெருக்கடிக்கு வழிவகுக்கும். இதனைச் சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், “திமுக மீண்டும் ஒரு தேர்தலையோ அல்லது மாநிலத்தில் ஒரு குழப்பமான சூழலையோ விரும்பவில்லை. எனவே, தவெக ஆட்சி அமைப்பதில் திமுக எந்தவிதமான இடையூறும் செய்யாது” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
நலத்திட்டங்களைத் தொடர வேண்டும்: ஆட்சி அமைப்பதைப் பற்றிப் பேசிய அதே வேளையில், திமுக செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அவர் நிபந்தனை விதித்துள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களைத் தவெக அரசு எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விஜய்யின் வாக்குறுதி குறித்து விமர்சனம்: தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் எனத் தவெக வாக்குறுதி அளித்திருந்தது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸ்டாலின், “இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது நடைமுறையில் மிகவும் கடினமான காரியம்” எனக் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் ₹1,000 திட்டத்தையே தொடர வேண்டும் என்பதே அவரது பேட்டியின் சாரமாகப் பார்க்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலினின் இந்த கருத்துக்கள், தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான பாதையைச் சுலபமாக்கியுள்ளன. இருப்பினும், எதிர்காலத்தில் தவெக அரசின் செயல்பாடுகளை திமுக எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதே அரசியல் ஆர்வலர்களின் தற்போதைய கேள்வியாக உள்ளது.





