மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை! அறை சோதனையை தைரியமாக எதிர்கொண்ட செந்தில் பாலாஜி அதிரடி!

காவல்துறை அதிகாரிகள் இன்று காலை நான் தங்கியிருந்த அறைக்கு வருகை தந்து சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக வந்த காவல்துறையினரிடம் தாராளமாகச் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறி எனது அறையைத் திறந்துவிட்டேன். அதிகாரிகள் அறையை முழுமையாகச் சோதனை செய்தனர். அந்தச் சோதனையின் முடிவில் எனது அறையிலிருந்து எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாகச் சான்றளித்து, என்னிடமும் கையெழுத்துப் பெற்று ஒரு நகலை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர். வழக்கமாக காலை 10:30 மணிக்குக் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டிய சூழலில், இந்தச் சோதனை காரணமாகச் சற்று தாமதமாகி தற்போது கையெழுத்திட வந்திருக்கின்றேன்.

ஏற்கனவே இந்த டாஸ்மாக் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, தற்போது தமிழ்நாடு காவல்துறை புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனக்குத் துளியும் தொடர்பில்லாத, என் பெயர் எஃப்.ஐ.ஆரில் இல்லாத வழக்கில் என்னை இணைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக நான் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுத் தொடர்ந்து காலை மற்றும் மாலை வேளைகளில் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றேன். இது குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "அமைச்சர் சரத்குமார் உடனே பதவி விலகணும்!" - சென்னையில் திமுக அதிரடி சாலை மறியல்.. தவெக அரசுக்கு எதிராக சேகர்பாபு, மேயர் பிரியா முழக்கம்!

எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பொதுவெளியில் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்குக் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமுமில்லை. கழகத் தலைவர் எங்களை நெஞ்சுரத்தோடு எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளார். எந்த சோதனையாக இருந்தாலும் அதனை நேருக்கு நேராக நின்று தைரியமாக எதிர்கொண்டு சட்டப்படி வெற்றி பெற்று வெளியே வருவோம்.