தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பும் வகையில், மதுரை செய்தியாளர் சந்திப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியத் தலைவரும் அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல் குமார், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை கடுமையாகச் சாடி ஆவேச பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
எடப்பாடியும் ஸ்டாலினும் இணைந்து ரகசியமாகப் பயணிக்க எப்போது கூட்டு சதி செய்தார்களோ, அப்போதே தமிழக அரசியலில் துரோகம் தொடங்கிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலினே நேரடியாகப் போன் செய்து பேசியதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதைவிட ஒரு கேவலமான தன்மானமற்ற அரசியல் இருக்க முடியாது என்று சாடினார். மக்கள் கொடுத்த உண்மையான தீர்ப்பு தவெக தலைவர் அண்ணன் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் என்றும், நம்பர் பாலிடிக்ஸ் கணக்குகளால் தற்பொழுது அது தள்ளிப்போயிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் டிடிவி தினகரனை மிகக் கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்த அமைச்சர் நிர்மல் குமார், “கடந்த 9 ஆண்டுகளாக எடப்பாடியையும் ஓபிஎஸ்ஸையும் துரோகி என்று தினமும் 100 முறை பேசிவிட்டு, தற்பொழுது அதே ஓபிஎஸ்ஸை முதலமைச்சராக்கக் கவர்னர் மாளிகைக்கு எம்.எல்.ஏ சீட்டோடு ஓடிய டிடிவி தினகரனுக்குக் கொஞ்சம் கூட வெட்கமே இல்லை. இவரை நம்பி ஏர்போர்ட்டில் கூடி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த 50,000 தொண்டர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு தற்பொழுது சுயநலத்திற்காக வளைந்து நெளிந்து போகிறார். பொதுவெளியில் அவர் தனது ஒட்டுமொத்த மரியாதையையும் இழந்துவிட்டார்” என்று பேசினார்.
தொடர்ந்து கரூரில் நடந்த உயிரிழப்பு விவகாரம் மற்றும் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், “அங்கு என்ன நடந்தது என்று கூட ஸ்பாட்டிலிருந்த எஸ்பிக்கே தெரியாத போது, செந்தில் பாலாஜிக்கு ஐந்து நிமிடத்தில் எப்படித் தகவல் தெரிந்தது? அவர் என்ன ஜிஹெச் பக்கத்திலேயே ரூம் போட்டு காத்துக் கொண்டிருந்தாரா? திமுக மீது இன்னும் விடை தெரியாத பல கேள்விகள் உள்ளன. ராஜீவ் காந்தி மரணத்தின் போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்த கலைஞர் கருணாநிதியின் கூட்டம் ஏன் திடீரென ரத்து செய்யப்பட்டது என்ற கேள்விக்கு இன்னும் ஜெயின் கமிஷனில் விடை இல்லை. அதேபோல் தான் இந்த கரூர் சம்பவமும் ஒரு மர்மமாகவே இருக்கும். வரும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் மக்கள் யாருக்குச் சுயநலம் உள்ளது, யார் ஊழல்வாதிகள் என்பதைப் புரிந்து கொண்டு அண்ணன் விஜய் தலைமையிலான தவெகவிற்குப் பிரம்மாண்ட வெற்றியைத் தருவார்கள்” என்று மிக ஆவேசமாகத் தெரிவித்தார்.





