அமெரிக்காவில் தங்கிப் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், ஊடகப் பத்திரிகையாளர்கள் மற்றும் கல்விப் பரிமாற்றத் திட்டப் பயணிகளின் விசா கால அளவைக் கடுமையாகக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டிருந்த டிரம்ப் நிர்வாகத்தின் புதிய நடைமுறைக்கு அந்நாட்டின் கூட்டாட்சி நீதிமன்றம் அதிரடி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நடைமுறைக்கு வரவிருந்த இந்த விதியினால் பல்லாயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் சூழல் உருவான நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சர்வதேசச் சமூகத்திற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் கொண்டுவர முயன்ற இந்த புதிய விதிமுறைகளின்படி, சர்வதேச மாணவர்கள் மற்றும் கல்விப் பரிமாற்ற விசாக்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மட்டுமே காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும், சர்வதேசப் பத்திரிகையாளர்களின் விசா காலத்தை 240 நாட்களாகவும், சீனப் பத்திரிகையாளர்களுக்கான விசா காலத்தை வெறும் 90 நாட்களாகவும் குறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தால் மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை அமெரிக்காவில் தடையின்றித் தொடர்வதில் மிகப்பெரிய சிக்கல்கள் எழும் அபாயம் உருவானது.
இந்த விதியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த மாசசூசெட்ஸ் மாவட்டக் கூட்டாட்சி நீதிபதி எஃப். டென்னிஸ் சேய்லர், டிரம்ப் அரசின் புதிய விசா கொள்கையை உடனடியாக நிறுத்திவைக்க உத்தரவிட்டார். “இந்த விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டால், அது அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மற்றும் உயர்கல்வித் துறைக்கு மீட்டெடுக்க முடியாத பேரழிவை ஏற்படுத்தக்கூடும்” எனக் குறிப்பிட்ட நீதிபதி, இந்த இடைக்காலத் தடையை நாடு முழுமைக்கும் பொருந்துமாறு பிறப்பித்து உத்தரவிட்டார்.





