சுமார் ₹95 லட்சம் கோடி நிதியா? வாக்காளர்களை விலை பேசுகிறாரா டிரம்ப்… தூக்கமிழந்த நிபுணர்கள்!

அமெரிக்கக் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத மிகப்பிரம்மாண்டமான, அதேசமயம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஒரு அதிரடித் தேர்தல் வாக்குறுதியை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்! வரவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபை தேர்தலில் குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால், நாட்டின் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் தலா 5,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹4.20 லட்சம்) ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்பதுதான் அந்த மெகா அறிவிப்பு!

“டிரம்ப் டிவிடெண்ட்” (Trump Dividend) என்ற பெயரில் வழங்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், அமெரிக்காவில் உள்ள சுமார் 27 கோடித் தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஒரே ஒரு வாக்குறுதியை நிறைவேற்ற அமெரிக்க அரசிற்கு சுமார் 1.2 டிரில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 95 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்! இவ்வளவு பிரம்மாண்டமான தொகையைக் கார்ப்பரேட் வரிகள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகச் சுங்க வரிகள் மூலமாகத் திரட்ட முடியும் என டிரம்ப் தரப்பு நம்பினாலும், நிபுணர்கள் இதைப் பார்த்து உறைந்துபோய் உள்ளனர்.

தற்போது 435 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில், டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 218 எம்.பி.க்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 214 எம்.பி.க்களும் உள்ளனர். மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் இயங்கி வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடு ஒருவேளை எதிர்க்கட்சியின் கைக்குச் சென்றுவிட்டால், அதிபர் டிரம்ப் கொண்டுவர நினைக்கும் புதிய சட்டங்கள், வரவு-செலவுத் திட்டங்கள் (பட்ஜெட்) மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் முடங்கும் அபாயம் உள்ளது.

இந்த அரசியல் நெருக்கடியைச் சமாளிக்கவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தனது முழுமையான கட்டுப்பாட்டில் தக்கவைத்துக்கொள்ளவும் டிரம்ப் வீசியுள்ள இந்த 5,000 டாலர் ‘வலை’, அமெரிக்க அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் இதனை “வாக்காளர்களுக்குக் கொடுக்கப்படும் அப்பட்டமான லஞ்சம்” எனக் கடுமையாகச் சாடி வரும் வேளையில், சர்வதேச அரசியல் களம் இந்தத் தேர்தலை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகிறது!