தமிழ்நாடு சட்டமன்றத்தையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் ‘சினிமா தியேட்டர்’ எனக் கிண்டலடித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். பரமக்குடி செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அதற்குப் பதிலடி தரும் வகையில் பேசிய வன்னி அரசு, சீமானின் அரசியல் போக்கையும் அவரது கருத்துகளையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
சினிமா தியேட்டரில் இருந்து திரையுலகக் கலைஞராகத் தன் பயணத்தைத் தொடங்கியவர் தான் சீமான் என்று சுட்டிக்காட்டிய வன்னி அரசு, அவர் எப்படியாவது மக்கள் பிரதிநிதியாகச் சட்டசபைக்குள் சென்று அமர வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அவரது அரசியல் எண்ணத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கோ அல்லது மக்களின் முன்னேற்றத்திற்கோ ஒருபோதும் துளிக்கூடச் செயல்படாத ஒரு நபர் தான் சீமான் என்றும், அவர் தொடர்ந்து சமூகத்தில் வெறுப்பு அரசியலையே விதைத்து வருகிறார் என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சீமான் போன்ற நபர்களை மாநில மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வன்னி அரசு திட்டவட்டமாகக் கூறினார். சட்டமன்றத்தின் கண்ணியத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் சீமான் பேசிய கருத்துகள், அவரது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையையே காட்டுவதாகவும், மக்கள் அவரை நிராகரித்த விரக்தியிலேயே இதுபோன்ற அவதூறுகளைத் பரப்பி வருகிறார் என்றும் விசிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





