EV Velu Slams TVK Gov: “திட்டமிட்டு பழிவாங்கும் அரசு!” எ.வ.வேலு பரபரப்பு பேட்டி!

தவெக அரசு திட்டமிட்டு தன் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக திமுகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான எ.வ.வேலு மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், ஜூலை 15ஆம் தேதியான இன்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளிப்பதாக எ.வ.வேலு ஏற்கனவே உறுதியளித்திருந்தார். அதன்படி, சிங்கப்பூர் மருத்துவப் பரிசோதனையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர், கூடுதல் எஸ்பி அனுப்பிய கடிதத்தின்படி இன்று காலை 10:45 மணியளவில் காவல் நிலையத்திற்கு நேரில் ஆஜரானார். காலை 11 மணி முதல் அவரிடம் விசாரணை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைத் தொடுத்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவல்துறையினர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நான் 100 விழுக்காடு உண்மையான பதில்களை அளித்துள்ளேன். இதில் எந்தவிதமான கலப்படமும் இல்லை. எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமும் இல்லை. நான் எந்தவொரு தவற்றையும் செய்யவில்லை. தற்போதைய தவெக அரசு திட்டமிட்டே என்னை இந்த வழக்கில் இணைத்து பழிவாங்கத் துடிக்கிறது,” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  US Strikes Damage Iran Power Grid: அமெரிக்கா நடத்திய கோரத் தாக்குதல்! முடங்கியது ஈரானின் மின்கட்டமைப்பு! மக்கள் தவிப்பு!

மேலும் காவல்துறையினர் குறித்துப் பேசுகையில், “அம்பு எய்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, அம்பு போன்ற காவல்துறையினர் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே காவல்துறைதான் திராவிட மாடல் ஆட்சியில் பணி செய்தது. ஆட்சியில் இருப்பவர்கள் மாறினாலும் காவல்துறை என்பது எப்போதும் நிரந்தரமானதுதான். எனவே அவர்கள் முறைப்படி விசாரணை செய்தனர், நானும் முறைப்படி பதிலளித்தேன். மீண்டும் அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருக்கிறேன். இந்த வழக்கு ஜூலை 28 அன்று நீதிமன்றத்திற்கு வருகிறது, அங்கு எனக்கு முழுமையான நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என்று எ.வ.வேலு கூறினார்.