ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விசாரணைக்கு ஆஜராகாத நிலை குறித்து, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அதிரடியான மற்றும் பரபரப்பான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தான் எங்கும் ஓடவில்லை, ஒளியவில்லை, பதுங்கவில்லை என்றும், தங்களை திமுக அப்படி வளர்க்கவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தான் கடந்த 2016 ஆம் ஆண்டு முதலே சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இதயப் பிரச்சனைக்காகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த முறை சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் செல்ல கடந்த மாதமே முறைப்படி விசா பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் ஜூன் 25 ஆம் தேதியே தான் சிங்கப்பூர் செல்வதாக இருந்ததாகவும், ஆனால் அன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால், அதற்குத் தான் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தனக்கு ஒவ்வாமை, நரம்பு மற்றும் இதயம் சார்ந்த கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதற்கான மருத்துவ அட்டவணையின்படி ஜூன் 29 ஆம் தேதி நியூரோ பிரச்சனைக்காகவும், ஜூன் 30 ஆம் தேதி வயிறு தொடர்பான பிரச்சனைக்காகவும், தொடர்ந்து ஜூலை 3 ஆம் தேதி இதய மருத்துவரிடமும் சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்றதாகத் தனது தற்போதைய மருத்துவப் பயண விபரங்களை எ.வ.வேலு வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே, சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்குச் சென்றிருந்த திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தற்போது சென்னை திரும்பியுள்ளதால், அவர் நாளை லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராவார் என்றும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.





