கோவை மாவட்ட திமுகவில் நிலவி வரும் உள் விவகாரங்கள் மற்றும் ஊழல் புகார்கள் குறித்து, அக்கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ஒருவர் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், செந்தில் பாலாஜியின் ஆளுமையின் கீழ் இயங்கும் கோவை மண்டலத்தில் தொடர் ஊழல்கள் நடைபெற்று வருவதாகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணங்களை விவரித்த அவர், செம்மொழி பூங்காவில் 40 கோடியில் ஊழல் நடந்தாகவும், மற்றும் பல துறைகளில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், கோவையில் 5 லட்சம் முதல் 500 கோடி ரூபாய் வரையிலான எந்தவொரு ரோடு காண்ட்ராக்ட் மற்றும் டெண்டர் பெற வேண்டுமானாலும், குறிப்பிட்ட சதவீத தொகையை ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் முன்பணமாகக் கொடுத்தால் மட்டுமே சாங்க்ஷன் செய்யப்படும் என்ற நிலை உள்ளதாகத் தெரிவித்தார். சாதாரண மக்கள் வீடு கட்டுவது முதல் வரி போடுவது வரை அனைத்து மட்டங்களிலும் லஞ்ச முறை அதிகரித்து விட்டதாகவும், இதன் காரணமாகவே திமுக நிர்வாகிகள் குடும்பத்தினரே தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை என்றும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டே தாம் திமுகவில் இணைந்ததாகவும், ஆனால் தற்போது கட்சியில் சமூக நீதி இல்லாமல் குடும்ப அரசியல் மட்டுமே மேலோங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் என குடும்ப வாரிசுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகச் சாடிய அவர், திராவிட கட்சிகள் மீதான அதிருப்தியும், தவெக தலைவர் விஜய் மீதான நம்பிக்கையுமே தற்போதைய அரசியல் மாற்றத்திற்குக் காரணம் எனக் கூறி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.





