“முன்ஜாமீன் தந்தும் சரணடையாதது ஏன்?” – செந்தில் பாலாஜி, சகோதரர் மனுக்கள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கின் தொடர்ச்சியாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தங்களை எவ்வித துன்புறுத்தலும் செய்யக்கூடாது என்றும், முன்ஜாமீன் பெற்றுள்ள தங்களை வேறு புதிய வழக்குகளில் கைது செய்யக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கைக்குக் கடும் கண்டனமும் கேள்விகளையும் எழுப்பினார். நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்ட பிறகும், இதுவரை முறைப்படி நீதிமன்றத்தில் சரணடையாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, முன்ஜாமீன் பெற்றும் சரணடையாத ஒரு சூழலில், காவல் துறையினர் துன்புறுத்தக் கூடாது என்ற நிவாரணத்தை நீதிமன்றத்திடம் எப்படி கோர முடியும் என்று காரசாரமாக வினவினார்.

முன்ஜாமீன் உத்தரவைப் பின்பற்றிச் சரணடையத் தவறிய நிலையில், இத்தகைய பாதுகாப்புக் கோரும் மனுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.