“சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசாராமிற்கு சிறையில் 24 மணி நேர ஆள் வசதியா?” – உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

கடந்த 2013-ஆம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில், ஆன்மீகக் சிகிச்சை தருவதாக நம்பவைத்து 16 வயது சிறுமியைத் தடுத்து வைத்து கொடூரமான பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்ஸோ (POCSO) மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் 85 வயதான போலிச் சாமிஜியான ஆசாராம் பாபு. இந்த வழக்கில் தனக்கு மருத்துவக் காரணங்களைக் காட்டி இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி ஆசாராம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இருப்பினும், சிறையிலேயே அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் 24 மணி நேரமும் தங்கிப் பராமரிக்கும் சிறப்பு மருத்துவ உதவியாளரை (Caretaker) வைத்துக்கொள்ள நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.பி.வராலே அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை மருத்துவர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையைக் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், “ஆசாராமிற்கு மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை; ஆனால் அவருக்கு 24 மணி நேரமும் தொடர்ச்சியான மருத்துவ உதவி மற்றும் பராமரிப்பு தேவைப்படலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அளித்த உறுதிமொழியை ஏற்று, ஆசாராம் விரும்பும் பயிற்சி பெற்ற உதவியாளரைச் சிறைக்குள்ளேயே வைத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "லுக் அவுட் நோட்டீஸ் தடை செல்லும்!" உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பலத்த பின்னடைவு! எ.வ.வேலு வழக்கில் அதிரடி தீர்ப்பு!

அதேவேளையில், நீதிமன்றத்தில் ஆசாராம் தரப்பு உண்மைகளை மறைத்து விளையாட்டு காட்டியதாக ராஜஸ்தான் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். “உச்சநீதிமன்றத்தில் மருத்துவ ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும்போதே, அதனைத் தெரிவிக்காமல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் ஆசாராம் தரப்பு பரோல் மனுத் தாக்கல் செய்து 20 நாட்கள் பரோலையும் பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் தகவல்களை மறைத்து இவர்கள் நிவாரணம் பெற முயல்கிறார்கள்” என மேத்தா வாதிட்டார். இதற்கு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், “உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது உயர்நீதிமன்றம் பரோல் வழங்கியதா? இது சரியான நடைமுறை அல்ல” எனத் தனது வாய்மொழி கவலையைப் பதிவு செய்தார்.

சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக நீதிமன்றத்தால் ‘இயற்கை மரணம் எய்தும் வரை சிறைத்தண்டனை’ விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு, சிறைக்குள்ளேயே 24 மணி நேரமும் பணிவிடை செய்யச் சொந்த ஆளை நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குரலையும் நீதியையும் புறந்தள்ள முடியாது என உயர்நீதிமன்றமே முந்தைய தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், ஆசாராமிற்கு அளிக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு வசதி இணையதளங்களில் கடுமையான கருத்து மோதல்களையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.