Shocking Incident: சத்துணவு சாம்பாரில் சாணி பவுடர் விஷம் கலக்கத் தூண்டிய நபர் கைது: ஈரோட்டில் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கத் தயார் செய்யப்பட்ட காலை உணவுச் சாம்பாரில் ஆபத்தான சாணி பவுடர் கலக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், சமையல் ஊழியர்கள் உஷாரானதால் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படுவது உடனடியாகத் தடுக்கப்பட்டுப் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்த சத்தியமங்கலம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இச்சதிச் செயலுக்குப் பின்னணியில் இருந்து தூண்டியிருப்பது தெரியவந்தது. ஆறுமுகத்தின் மனைவி ஏற்கனவே காலை உணவுத் திட்டச் சமையல் பணியில் பணியாற்றி வந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக அவர் அப்பணியில் இருந்து நீக்கப்பட்டு வேறொரு நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தன் மனைவி சமையல் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் கடும் ஆத்திரமடைந்த ஆறுமுகம், பழிவாங்கும் நோக்கில் இந்த விபரீதச் செயலைச் செய்யத் தூண்டியதாகக் காவல் துறை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, பள்ளிச் சிறுவர்களின் உயிரோடு விளையாட முயன்ற ஆறுமுகத்தைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.