“ஓட்டு போட்ட மக்கள் தான் பதில் சொல்லணும்!” – தவெக அரசை வெளுத்து வாங்கிய பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு!

தமிழகத்தில் புதிய தவெக அரசு அமைந்து 50 நாட்களுக்கு மேலாகியும் அடிப்படைப் பணிகளைக் கூட இன்னும் தொடங்கவில்லை என்றும், அரிசி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதால் மாநிலம் வறட்சியையும் பட்டினியையும் நோக்கிச் செல்லும் அபாயம் நிலவுவதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்திடம், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகம்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர், விஜய் அவர்களின் தலைவராகவும், அது அவருடைய கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் திரையரங்கிற்குச் சென்று பார்ப்பது இயல்பான ஒன்று தான் என்றும், அதில் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சிக்கு வந்து 50 நாட்களுக்கு மேலாகியும் தாலுகா அலுவலகம் முதல் மின்சாரத் துறை, மாநகராட்சி வரை எந்தவொரு அடிப்படைப் பணிகளும் துவங்கப்படவில்லை என்று அரசு அதிகாரிகளே தெரிவிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

அரசு தரப்பில் டைம் கேட்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், “மாற்றம் ஒன்று தான் மாறாதது என நம்பி ஓட்டு போட்ட மக்கள் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த மக்களிடம் தான் இதன் பொறுப்பை விட்டுவிட வேண்டும், மக்கள் தீர்ப்பே மகேஸ்வரன் தீர்ப்பு” என்று காரசாரமாகத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தற்போது அரிசி விலை டன் ஒன்றுக்கு ரூ.15,000 வரை உயர்ந்துள்ளதாகவும், கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.40 வரை தரத்திற்கு ஏற்ப விலை அதிகரித்திருப்பது மிகப்பெரிய ஆபத்தான அறிகுறி என்றும் எச்சரித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "இது மாநிலத்திற்கே நேரும் அவமானம்!" தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகக் கமல் ஹாசன் ஆவேசம்; ஆளுநருக்குப் பொம்மை வழக்கைத் தூர்வாரிய உலகநாயகன்!

காவேரியில் நீர் வராத சூழல், மேகதாது அணை கட்டும் முயற்சி, எல்நினோ காரணியால் மழை பொய்த்துப் போகும் அபாயம் போன்ற தொடர் சிக்கல்களால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இந்த அவல நிலையைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் விஜயகாந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 1-ம் தேதி ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்தார். மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த ஆறு மாதங்களில் கடும் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.