Mutual Fund Nominee Rule: இறந்தவர் பெயரில் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளை கிளைம் செய்வது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் ஒருவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால், அவர் சேமித்து வைத்துள்ள ஃபண்ட் யூனிட்டுகள் மற்றும் பணத்தை அவரது நாமினி (Nominee) அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் தங்களது பெயருக்கு எவ்வாறு எளிதாக மாற்றிக் கொள்வது என்ற வழிமுறைகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

பொதுவாக ஒரு முதலீட்டாளர் இறந்துவிட்டால், அந்த கணக்கில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை நாமினியின் பெயருக்கு மாற்றும் இந்தச் செயல்முறைக்கு நிதித்துறையில் ‘டிரான்ஸ்மிஷன்’ (Transmission) என்று பெயர். முதலீட்டாளர் மறைந்த செய்தி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு (AMC) அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டவுடன், அந்த கணக்கில் அதுவரை செயல்பாட்டில் இருந்த அனைத்து முறையான முதலீட்டுத் திட்டங்களும் (SIP) மற்றும் முறையான திரும்பப் பெறுதல் திட்டங்களும் (SWP) உடனடியாக நிறுத்தி வைக்கப்படும். கணக்கு முடக்கப்பட்டு, நாமினியின் சரிபார்ப்புப் பணிகள் முடியும் வரை எந்தவித பணப் பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்பட மாட்டாது.

இந்த ஃபண்டுகளைத் தனது பெயருக்கு மாற்றுவதற்கு நாமினி சில முக்கியமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். முதலீட்டாளரின் அசல் இறப்புச் சான்றிதழ் அல்லது முறையாக சான்றளிக்கப்பட்ட அதன் நகல், நாமினியின் பான் கார்டு மற்றும் கேஒய்சி (KYC) விவரங்கள் ஆகியவற்றைத் தயார் செய்து கொள்ள வேண்டும். இவற்றுடன், பணம் மாற்றப்பட வேண்டிய நாமினியின் புதிய வங்கி கணக்கு விவரங்கள் (Cancel Cheque Leaf) மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் ‘டிரான்ஸ்மிஷன் படிவத்தை’ (Transmission Form) பூர்த்தி செய்து வழங்க வேண்டும். முதலீட்டின் மதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், வங்க மேலாளரின் கையொப்பம் பெற்ற சான்றுகளும் தேவைப்படலாம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  “உண்டியல் திருடர்களை தூக்கில் போடுங்க!” ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் திடீர் ராஜினாமா: அப்பட்டமான நாடகம் என அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்!

நாமினியாக நியமிக்கப்பட்டவர் மைனராக (18 வயதிற்குட்பட்டவர்) இருந்தால், அவரது பாதுகாவலர் (Guardian) இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து நிதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். அனைத்து ஆவணங்களும் AMC அல்லது கேம்ஸ் (CAMS), கார்வி (Karvy) போன்ற ஃபண்ட் பரிமாற்ற முகமைகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆவணங்களின் உண்மைத்தன்மை முழுமையாக ஆராயப்படும். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், சில வாரங்களுக்குள் இறந்த முதலீட்டாளரின் ஃபண்ட் யூனிட்டுகள் அனைத்தும் நாமினியின் புதிய ஃபோலியோ கணக்கிற்கு தடையின்றி மாற்றப்பட்டுவிடும்.

இதன் பிறகு நாமினி அந்த ஃபண்டுகளை அப்படியே தொடரலாம் அல்லது தேவைப்பட்டால் முழுமையாக விற்பனை செய்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். முதலீட்டாளர்கள் தங்களது மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் நாமினியைச் சரியாகப் பதிவு செய்து வைப்பது, எதிர்காலத்தில் குடும்பத்தினர் எளிதாகப் பணத்தைப் பெறுவதற்கு உதவும் மிக முக்கியமான நிதி நடவடிக்கையாகும்.