தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக) பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான விவாதமும், அதே சமயம் அனல் பறக்கும் சுவாரசியமான வாதப் பிரதிவாதங்கள் அரங்கேறியுள்ளன.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேருக்கு நேர் அமர்ந்திருக்க, பேரவை விதிகளுக்கு உட்பட்டு இந்த விவாதங்கள் நடைபெற்றன. இதில் திமுக சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், தவெக அரசின் புதிய திட்டங்களை பிரபல திரைப்பட இயக்குனர் அட்லியின் படங்களுடன் ஒப்பிட்டுப் பேசியது அவையில் பெரும் சிரிப்பலையையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியது.
விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சிவசங்கர், “திரைப்பட இயக்குனர் அட்லி ஒரு நல்ல இயக்குனர் தான், அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர் ஏற்கனவே திரைக்கு வந்து ஹிட் அடித்த பழைய திரைப்படங்களில் இருந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக சுவாரசியமான காட்சிகளை எடுத்து ஒரு புதிய திரைப்படத்தைப் போல எடுத்து விடுவார். அதேபோலத்தான் நேற்றைய தினம் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்ற தவெக அரசின் திட்டங்கள் அனைத்தும் உள்ளன. திமுக ஆட்சியின் சிறப்பான திட்டங்களை எல்லாம் அங்கும் இங்குமாக எடுத்து, தங்களது புதிய திட்டங்களைப் போல அட்லி பட பாணியில் காப்பி அடித்து எடுத்து வைத்துள்ளனர்” என்று சாடினார்.
அமைச்சர் ராஜ்மோகனின் சுடச்சுட பதிலடி: திமுக உறுப்பினரின் இந்த சினிமா பாணி விமர்சனத்திற்கு உடனே எழுந்து பதிலடி கொடுத்த தவெக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “எங்களது முதலமைச்சர் சினிமா துறையில் இருந்து மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அரசியலுக்கு வந்தவர், அதனால் அவருக்குத் திரைத்துறை பற்றித் தெரிந்திருக்கலாம். ஆனால் ஒரு முழுநேர அரசியல்வாதியான உங்களுக்கு இயக்குனர் அட்லி குறித்தும், அவர் எப்படிப் படம் எடுக்கிறார்? என்பது குறித்தும் இந்த அளவிற்குத் தெரிந்திருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக மட்டுமல்லாமல், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இந்த ஆட்சிக்கும் இயக்குனர் அட்லிக்கும் என்ன தொடர்பு?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “பேரவையில் இது போன்ற சம்பந்தமற்ற வாதங்களை முன்வைக்காமல் மக்களுக்குத் தேவையான கருத்துக்களை மட்டும் பேசுங்கள். பொதுக்கூட்ட மேடைகளில் நீங்கள் எங்களைப் பற்றிச் சொன்ன விமர்சனங்களுக்கு எங்களால் தகுந்த பதிலடி கொடுக்க முடியும். தவெக அரசை விட திமுக ஒன்றும் கூடுதலாக வாக்குகளை வாங்கிவிடவில்லை. திமுக கூட்டணி வாக்குகளை எல்லாம் தங்களது தனிப்பட்ட வாக்குகளைப் போலக் காட்டி, தவெக-வை விடக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றியைத் தவறவிட்டதாகக் கதை கட்டுகிறீர்கள். ஆனால், தற்பொழுது உங்களுக்கு வாக்களித்த மக்களும், உங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுமே உங்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று மிகக் கடுமையான பதிலடியை அவையில் பதிவு செய்தார். இந்த விவாதத்தின் போது முதலமைச்சர் விஜய்யும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் அமைதி காக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட, அதிமுக உறுப்பினர்கள் சில குறுக்கீடுகளைச் செய்தனர். மேலும், சட்டமன்றத்தில் அட்லி குறித்த இந்த விவாதம் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.





