தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய திருப்பமாக, முதல்வர் சி. ஜோசப் விஜய் கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்குத் தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் விஜய் வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் சந்தித்து அரசு நலத்திட்ட உதவிகளையும், காருண்ய அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் உஷேபா அகமதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், வழக்கில் தொடர்புடைய முக்கியச் சாட்சிகளாக இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, தற்போதைய ஆளுங்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் நேரடியாகச் சந்தித்து அரசு உதவிகளை வழங்குவது சிபிஐ விசாரணையின் நேர்மையைப் பாதிக்கும் என்றும், சாட்சிகளைத் திசைதிருப்ப வாய்ப்பாக அமையும் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அதிரடி மனுவை அவசரமாக விசாரிக்க ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு, இதன் மீதான விசாரணையை நாளை (ஜூலை 7, 2026) நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.





