“3 மாசம் ஆச்சு.. ஒரு வேலையும் நடக்கல!” – விஜய் அரசு குறித்துக் கொந்தளித்த ஜேம்ஸ் வசந்தன்!

ஆட்சிப் பொறுப்பேற்று 75 நாட்களைக் கடந்துள்ள நிலையில், விஜய்யின் நிர்வாகச் செயல்பாடு மற்றும் அவர் அறிவித்து வரும் திட்டங்கள் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

சமீபத்திய சிறப்பு நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜேம்ஸ் வசந்தன், விஜய்யின் 75 நாள் ஆட்சியில் எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையோ அல்லது முன்னேற்றமோ இல்லை என்று குற்றம் சாட்டினார். அரசுத் துறைகளும் அதிகாரிகளும் வழக்கம் போல் தங்கள் வேலைகளைச் செய்வதால் மட்டுமே இந்த அரசு உயிரோடு இயங்கிக் கொண்டிருக்கிறதே தவிர, இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறிய அவர், இந்த நிலையை ‘அத்திப்பழப் புழுவின் வாழ்க்கைக்கு’ ஒப்பிட்டுப் பேசினார்.

முந்தைய அரசால் தொலைநோக்கோடு தொடங்கப்பட்டு, உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்புகளால் பாராட்டப்பட்ட ‘முதல்வர் காலை உணவுத் திட்டத்தின்’ பெயரை விஜய்யின் அரசு ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றியதை அவர் கடுமையாகச் சாடினார். காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் என்றும், காலை உணவுத் திட்டத்தின் கவனம் முந்தைய முதல்வருக்குச் சென்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  National Education Update - Annamalai Reacts: "மத்திய அரசு முடிவுக்கு அண்ணாமலை முதல்முறை எதிர்ப்பு!" சிபிஎஸ்இ மும்மொழிக் கல்வி அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி; அண்ணாமலை காரசார அறிக்கை!

மேலும், கஜானாவில் பணம் இல்லை என்று கூறிவிட்டுத் ‘தாய்மாமன் சீர் மோதிரம்’ போன்ற சுய விளம்பரத் திட்டங்களை அரசுப் பணத்தில் அறிவிப்பது ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதமான நிலையான வாழ்வாதார முன்னேற்றத்தையும் தராது என்றும் அவர் குறிப்பிட்டார். தலைவருக்குரிய துணிச்சலோ அல்லது பொறுப்பேற்கும் பண்போ விஜய்யிடம் இல்லை என்றும், இத்தகைய நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் தனது பேட்டியில் தீவிரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.