“புதுவகை நோய் வதந்தி: வெளிநாட்டிலிருந்து பரவும் அம்மோனியா/ஒமேகா நோயைக் கட்டுப்படுத்த மொட்டை அடிப்பவர்களுக்குப் பெண்களுக்கு ₹15,000, ஆண்களுக்கு ₹6,000 தருவதாக ஆசைவார்த்தை.” – சேலத்தில் தாசில்தார் பேசுவதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய அதிர்ச்சி மோசடி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கடை மற்றும் தென்னங்கொடிபாளையம் பகுதியில், தாலுகா அலுவலகத்திலிருந்து தாசில்தார் பேசுவதாகக் கூறி, கிராமப்புறப் பெண்களை மொட்டை அடிக்க வைத்து நிதி உதவி தருவதாக ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றிய விசித்திரமான மோசடிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்த தகவலின்படி, அவர்களின் கைபேசிக்குத் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், தங்களைத் தாலுகா அலுவலகத் தாசில்தார் என்றும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விபரங்களைச் சேகரிப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். தொடர்ந்து பேசியவர்கள், வெளிநாட்டிலிருந்து புதுவிதமான அம்மோனியா, ஒமேகா நோய்கள் மற்றும் கொரோனா பரவி வருவதாகவும், அந்த நோயைக் கட்டுப்படுத்த முடி வழியாக நோய் பரவாமல் இருக்க மொட்டை அடிப்பவர்களுக்கு அரசு சிறப்பு நிவாரண நிதி வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.

அதன்படி, பெண்களுக்கு ₹15,000, ஆண்களுக்கு ₹6,000 மற்றும் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ₹45,000 பணமும் ₹65,000 மதிப்புள்ள லேப்டாப்பும் வழங்கப்படும் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். மேலும், அரசுக் கணக்கில் உடனே டோக்கன் எண்களைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப விபரங்கள் மற்றும் ரேஷன் கார்டு எண்களைத் துல்லியமாகச் சொல்லி நம்ப வைத்துள்ளனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "ஆட்சிக்கு வந்து 3 மாசம் ஆச்சு.. என்ன செஞ்சீங்க?" – விருதாச்சலத்தில் பிரேமலதா அதிரடி பேச்சு.. முதல்வருக்கு பகிரங்க சவால்!

இதனை உண்மையென நம்பிய கிராம மக்கள், தங்கள் உறவினர்கள் மற்றும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்களையும் வரவழைத்து மொட்டை அடிக்கத் தயாராகியுள்ளனர். தொடர்ந்து 3 பெண்கள் மொட்டை அடித்து முடித்த நிலையில், போனில் பேசிய நபர்கள் காரில் அரசு அதிகாரிகள் வந்து கொண்டிருப்பதாகவும், டேபிள் நாற்காலி போட்டுத் தயார் நிலையில் வைக்குமாறும் கூறியுள்ளனர். ஆனால், மொட்டை அடித்த பிறகு போன் இணைப்புகள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்படவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்துப் புகார்கள் எழுந்ததையடுத்து, கிராம மக்களைத் தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.