ரூ.1.39 கோடி இருந்தாத்தான் குழந்தையை வளர்க்க முடியுமா? இணையத்தை பிளந்த கணக்கு!

இந்தியாவில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, 18 வயது வரை வளர்ப்பதற்குத் தோராயமாக ரூ.1.39 கோடி செலவாகும் என இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள கணக்கீடு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் 2.8 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட விகியாத் சிங் என்ற கண்டென்ட் கிரியேட்டர், தான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதற்கான நிதிச் செலவுகளை விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.

கர்ப்ப காலம் மற்றும் பிரசவச் செலவுகளுக்கு ரூ.3 லட்சம், முதல் இரண்டு ஆண்டுகளில் டயப்பர் மற்றும் தடுப்பூசிகளுக்கு ரூ.6 லட்சம் என ஆரம்பக் கட்ட செலவுகளை அவர் கணித்துள்ளார். தொடர்ந்து, 2 முதல் 18 வயது வரையிலான காலத்தில் பள்ளிப் படிப்பிற்கு ரூ.33 லட்சம், பெரிய வீட்டிற்கான கூடுதல் வாடகையாக ரூ.32.4 லட்சம், உணவுக்கு ரூ.15 லட்சம், டியூஷனுக்கு ரூ.9 லட்சம், பொழுதுபோக்கிற்கு ரூ.9 லட்சம், விளையாட்டுப் பயிற்சிகளுக்கு ரூ.8 லட்சம், போக்குவரத்திற்கு ரூ.8 லட்சம், உடைகளுக்கு ரூ.7.2 லட்சம், மருத்துவப் பராமரிப்பிற்கு ரூ.5.4 லட்சம் மற்றும் மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களுக்கு ரூ.4 லட்சம் என அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் அவர் சேர்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vikhyat Singh (@vikhyat._)

இவை அனைத்தையும் கூட்டும் போது அடிப்படை செலவு ரூ.1.39 கோடியைத் தொடுகிறது. இதில் உயர்கல்வி கட்டணம், பணவீக்கம் மற்றும் முதலீட்டு வட்டி இழப்பு ஆகியவை சேர்க்கப்படவில்லை என்றும், இவற்றைச் சேர்த்தால் நிஜமான செலவு எளிதாக ரூ.2 கோடியைத் தாண்டிவிடும் என்றும் விகியாத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் செலவு இந்தியாவில் ஒரு சொகுசு பிஎம்டபிள்யூ எம்4 காரை வாங்குவதற்குச் சமம் என்றும் அவர் நகைச்சுவையாக ஒப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்குறீங்களா?" ஏமாறாமல் இருக்க கட்டாயம் பார்க்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் இருவேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தரப்பினர், உழைத்தால் பணம் மீண்டும் வந்துவிடும் என்றும், ஒரு குழந்தை தரும் அன்பையும் மகிழ்ச்சியையும் பணத்தால் அளவிட முடியாது என்றும் பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு தரப்பினரோ, இன்றைய காலகட்டத்தில் குடும்பம் தொடங்கும் முன் முறையான நிதித் திட்டமிடல் எவ்வளவு அவசியம் என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாக ஆதரித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.