ராணுவத்திற்கு நிதி திரட்ட உக்ரைன் எடுத்த அதிர்ச்சி முடிவு! ஆபாச உள்ளடக்கத்தை சட்டப்பூர்வமாக்கத் திட்டம்!

ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ராணுவத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு உக்ரைன் அரசு ஒரு புதிய யோசனையை பரிசீலித்து வருகிறது. போருக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களை வாங்க சொந்தமாக நிதி திரட்டும் நோக்கில், ஆபாச உள்ளடக்கங்களை (Pornography) சட்டப்பூர்வமாக்கி அதன் மூலம் வரி வசூலிப்பதற்கான சட்டவரைவு உக்ரைன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினரான யாரோஸ்லாவ் ழெலெஸ்னியாக் (Yaroslav Zheleznyak) இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளார். ஆபாச மற்றும் வயதுவந்தோருக்கான பொழுதுபோக்குத் துறையைச் (Adult Entertainment Industry) சட்டப்பூர்வமான அமைப்பிற்குள் கொண்டு வருவதன் மூலம், அரசுக்கு ஆண்டிற்கு சுமார் 25 மில்லியன் டாலர் வரை வரி வருவாய் கிடைக்கும் என்று அவர் வாதிடுகிறார். இந்த நிதியைக் கொண்டு போர்க்களத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சுமார் 30,000 ட்ரோன்களை உடனடியாகக் கொள்முதல் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள உக்ரைன் சட்டங்களின்படி, ஆபாச உள்ளடக்கங்களை உருவாக்குவது, விநியோகம் செய்வதும் மற்றும் வைத்திருப்பதும் சட்டவிரோதமான செயலாகும். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், உக்ரைனில் இந்தத் துறை மறைமுகமாகப் பரவலாக இயங்கி வருகிறது. மேலும், ‘ஒன்லிபேன்ஸ்’ (OnlyFans) போன்ற டிஜிட்டல் தளங்களில் செயல்படும் படைப்பாளிகளிடம் இருந்து உக்ரைன் வரி அதிகாரிகளே ஏற்கனவே வரிகளை வசூலித்து வருகின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சுமார் ₹95 லட்சம் கோடி நிதியா? வாக்காளர்களை விலை பேசுகிறாரா டிரம்ப்... தூக்கமிழந்த நிபுணர்கள்!

வரி செலுத்தாவிட்டால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும், அதே சமயம் வரி செலுத்தினாலும் சட்டவிரோத உள்ளடக்கம் தயாரித்ததாக வழக்குத் தொடரப்படும் முரண்பாடான நிலை நிலவுவதாகக் சுட்டிக்காட்டியுள்ள ழெலெஸ்னியாக், இதனாலேயே இத்துறையை முழுமையாகச் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். போரின் காரணமாக நிதி நெருக்கடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை உக்ரைன் எதிர்கொண்டு வரும் சூழலில், இந்த அதிரடி முன்மொழிவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.