பத்திரிகையாளர் விஜயனை அலைக்கழித்த போலீஸ்! கனிமொழி, சீமான், தினகரன் கடும் கண்டனம்! தவெக அரசுக்கு நெருக்கடி!

மூத்த பத்திரிகையாளரும் தனியார் தொலைக்காட்சியின் முதுநிலை ஆசிரியருமான விஜயனிடம் தமிழக காவல் துறையினர் நடத்திய அதிரடி விசாரணை ஊடக வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட யூட்யூபர் திருநாவுக்கரசுடனான வாட்ஸப் உரையாடல்களின் அடிப்படையில், முதுநிலை ஆசிரியருமான விஜயனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் தனக்குத் தெரிந்த அனைத்து விபரங்களையும் முழுமையாகத் தெரிவித்த பின்னரும், விசாரணை என்ற பெயரில் கடந்த இரண்டு நாட்களாகப் பத்திரிகையாளர் விஜயனை போலீஸார் கடுமையான முறையில் அலைக்கழித்துள்ளனர். மேலும், முறையான விதிகளைப் பின்பற்றாமல் அவரது கைப்பேசியைப் பறிமுதல் செய்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நள்ளிரவிலும், மறுநாளும் மணிக்கணக்கில் காக்க வைத்த காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கைக்குத் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயனை எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் அழைத்துச் சென்றதும், அவரது செல்போனைப் பறித்துக் காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருப்பதும் பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆப்பிள் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி! மேக்புக், ஐபேட் விலைகளை அதிரடியாக உயர்த்திய Apple!: உலகளாவிய ரேம் சிப் தட்டுப்பாடு தான் காரணமா? இந்தியாவில் புதிய விலை விபரங்கள் வெளியீடு! முழு விபரம் உள்ளே!

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கிய தவெக அரசு, தற்பொழுது பத்திரிகையாளர்கள் மீதும் தனது கீழ்மையான அரசியலைத் தொடங்கிவிட்டது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

இதேபோல், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு முன்னணி தொலைக்காட்சி நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவது தமிழ்நாடு பார்த்திராத பேரவலம் என்றும், இது ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட வெளிப்படையான மிரட்டல் என்றும் முதல்வர் விஜயைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் தங்களது கண்டனங்களை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, தவெக எம்.எல்.ஏ பேரம் பேசப்பட்ட வழக்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் காவல் துறை, மன்னார்குடி எம்.எல்.ஏ ஆதரவு அளித்தது போன்ற போலி கடித விவகாரத்தில் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது தவெக அரசுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியையும், பொதுமக்களிடையே விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.