“அப்பா CM ஆனது வரலாற்றுப் புரட்சி!”: நெகட்டிவ் கமெண்டுகளுக்கு ஜேசன் சஞ்சய் நறுக் பதில்! ‘சிக்மா’ ஸ்பெஷல் பேட்டி!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் மகனும், வளர்ந்து வரும் இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், பிரபல நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் விளம்பரக் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு ஜேசன் சஞ்சய் அளித்த நேர்காணல் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்த நேர்காணலில் தனது குடும்பம், குழந்தைப்பருவ நினைவுகள் மற்றும் சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து ஜேசன் சஞ்சய் மனம் திறந்து பேசியுள்ளார். ‘சிக்மா’ படத்தின் பாடலில் தான் நடனமாடியது குறித்துப் பேசிய அவர், ஆரம்பத்தில் கேமரா முன்பு ஆடப் பயந்ததாகத் தெரிவித்தார். சிறுவயதில் ‘வேட்டைக்காரன்’ படப் பாடலில் ஆடிய நினைவுகளைப் பகிர்ந்த அவர், “அப்போது எனக்கு 9 வயதுதான் இருக்கும். ஆர்வமாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்குச் சென்றாலும், ஸ்டார்ட் கேமரா என்றதும் கூட்டத்தைப் பார்த்து பயந்து அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். பிறகுதான் ஆடி முடித்தேன்” எனச் சுவாரசியமாக நினைவு கூர்ந்தார்.

தொகுப்பாளினி, “உங்கள் அப்பா இப்போது தமிழ்நாடு முதலமைச்சர், உங்கள் பொறுப்பும் அதிகரித்திருக்குமே?” எனக் கேட்டதற்குப் பதிலளித்த ஜேசன் சஞ்சய், “எனது அப்பா முதலமைச்சர் ஆனது என்பது ஒரு வரலாற்றுப் புரட்சி! எனக்கும் எனது தங்கைக்கும், குடும்பத்திற்கும் இது கூடுதல் பொறுப்பு. அப்பா எனக்குக் கொடுத்த முக்கியமான அறிவுரை, ‘உனக்கான இடத்தை நீயே உருவாக்கிக் கொள்ள வேண்டும். உதவி தேவைப்பட்டால் கேள், தருகிறேன். ஆனால் நானாக வந்து உதவி செய்ய மாட்டேன்’ என்பதுதான்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "போலீஸ் எச்சரிக்கவே இல்லை!" - முதல்வர் விஜய் பேச்சுக்கு ஆதாரத்துடன் மறுப்பு சொல்லும் காவல்துறை!

மேலும், தன் மீது பரப்பப்படும் வதந்திகள் மற்றும் எதிர்மறை கமெண்டுகளுக்குப் பதிலளித்த அவர், “சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வரும் கமெண்டுகளைப் படிப்பேன். எதிர்மறையாகக் கமெண்ட் செய்பவர்கள் என்னைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் அப்படிச் செய்கிறார்கள் என்று கடந்து விடுவேன். அதே நேரத்தில் அதிகமான அன்பையும் மக்கள் பொழிகிறார்கள்” என்று முதிர்ச்சியுடன் கூறினார். அப்பா விஜய்க்கும் ஜேசன் சஞ்சய்க்கும் இடையே மோதல் எனப் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு இந்தச் சிக்மா பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.